மயிலாடுதுறை தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதியில் 28 வது மக்களவை தொகுதியாகும். இந்த தொகுதி ஒரு பொதுத் தொகுதி. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பூம்புகார், சீர்காழி, மயிலாடுதுறை மற்றும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பாபநாசம், திருவிடைமருதூர், கும்பகோணம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது மயிலாடுதுறை மக்களவை தொகுதி. இதில் சீர்காழி மற்றும் திருவிடைமருதூர் ஆகிய 2 தொகுதிகள் பட்டியலினத்தோருக்காக ஒதுக்கப்பட்ட தனித் தொகுதிகள்.
இந்த தொகுதியில் மொத்தம் 15,38,351 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 7,56,846 மற்றும் பெண் வாக்காளர்கள் 7,81,436 ஆகும்.
பொருளாதாரம்
இந்த தொகுதி கொள்ளிடம் ஆற்றிற்கு தெற்கே பகுதியை கொண்டது. மேலும் காவிரி ஆற்றின் கடைமடை பகுதியாகவும் உள்ளது. இதனால் இங்குள்ள மக்களின் வாழ்வாதாரம் பெரும்பாலும் விவசாயத்தை நம்பியே இருக்கிறது. கூடுதலாக பட்டு நெசவு, மீன்பிடித்தொழில், குத்துவிளக்கு தயாரித்தல் ஆகியவை இங்கு வாழ்வாதரத்தின் முக்கிய பகுதிகளாக இருக்கின்றன. குறிப்பிடத்தகுந்த அளவிற்கு இங்கு தொழிற்சாலைகள் எதுவும் இல்லை.
சாதி – மதம்
சாதியை பொறுத்தவரையில் இந்த தொகுதியில் வன்னியர்கள் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். அதற்கு அடுத்தபடியாக ஆதிதிராவிடர்கள் இந்த தொகுதியில் அதிகமாக வசிக்கின்றனர். இது தவிர சீர்காழி, பூம்புகார் தொகுதியின் கடலோரப்பகுதிகளில் மீனவர்களும், பாபநாசம் பகுதியில் இஸ்லாமியர்கள் மற்றும் மூப்பனார்களும், திருவிடைமருதூர் தொகுதியில் செளராட்டிர்ரகளும், கும்பகோணம் தொகுதியில் பிராமணர்களும் பரவலாக வசித்து வருகின்றனர். இது தவிர முக்குலத்தோர், தேவேந்திர குல வேளாளர், செட்டியார் உள்ளிட்ட பல்வேறு சாதியை சேர்ந்த மக்கள் இந்த தொகுதியில் வாழ்ந்து வருகின்றனர்.
மத ரீதியாக பார்தோம் என்றால் இஸ்லாமியர்கள் 8 சதவீதம் கிறித்துவர்கள் 4.25 சதவீதம் பேர் வசிக்கின்றனர். மீதமுள்ள 81 சதவீதம்பேர் இந்துக்களாக உள்ளனர்.
தற்போதைய உறுப்பினர்
மயிலாடுதுறையின் தற்போதைய மக்களவை உறுப்பினரான திமுகவை சேர்ந்த எஸ்.ராமலிங்கம் இருக்கிறார். காவிரிப் படுகை பகுதிகளில் திமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான கோ.சி.மணியால் உருவாக்கபட்ட இவர், ஏற்கனவே திருவிடை மருதூர் தொகுதியில் 4 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். பின்னர் இந்த தொகுதி பட்டியிலினத்தோருக்கான தனித்தொகுதியாக மாற்றப்பட்ட பின்னர் வேறெந்த பொறுப்புகளும் இல்லாமல் இருந்தார். கட்சி அரசியலுக்கே உரிய அடிதடி, அராஜகம் போன்ற பன்புகள் இல்லாமல் அமைதியான சுபாவத்தை கொண்டவர் இவர்.
சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அருகில் இவரது இருக்கை இருந்ததால் அவரோடு நெருங்கி பழகும் வாய்ப்பு இவருக்கு இருந்தது. இவருக்கு 2019 ஆம் ஆண்டில் வேட்பாளராக நிற்க வாய்ப்பு கிடைக்க இதுவும் ஒரு முக்கிய காரணமாகும்.
2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்ததில்போது இந்தியாவெங்கும் மோடி அலை வீசியது. ஆனால் தமிழ்நாட்டில் அதற்கு எதிரான அலையே வீசியது. அதிமுக -பாமக -பாஜக கூட்டணி தேனி தொகுதியை தவிர அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது. அப்போது மயிலாடுதுறை தொகுதியில் திமுக வேட்பாளரான எஸ்.ராமலிங்கம் அதிமுக வேட்பாளராக இருந்த ஆசைமணியை 2.6 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.
முக்கிய வேட்பாளர்கள்
திமுகவின் மக்களவை உறுப்பினரான எஸ் ராமலிங்கம் மீண்டும் இந்த தொகுதியில் போட்டியிடவில்லை. திமுக கூட்டணியில் இந்த தொகுதி காங்கிரசிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் சார்பில் மகளிர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஆர்.சுதா போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் பூம்புகார் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பவுன்ராஜின் மகன் பாபு போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் இந்த தொகுதி பாமகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பாமக சார்பாக திருவிடைமருதூரை சேர்ந்த மக ஸ்டாலின் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் காளியம்மாள் போட்டியிடுகிறார். மயிலாடுதுறையில் இந்த நான்கு பேர் முக்கிய வேட்பாளராக உள்ளனர்.
இவர்களில் காளியம்மாளை தவிர மற்ற அனைவரும் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்கள். காங்கிரசின் வேட்பாளர் சுதாவை தவிர மற்ற அனைவரும் இதே தொகுதியை சேர்ந்தவர்கள்.
வேட்பாளர் அறிமுகம்
அதிமுகவின் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினராக 2011 முதல் 2021 வரை பதவியில் இருந்தவர் பவுன்ராஜ். வன்னியர் சமூகத்தை சேர்நதவர். இவருக்கு அந்த பகுதியில் சொல்லும்படியான எதிர்ப்புகள் இல்லை. மேலும் இவர் அதிமுகவின் மயிலாடுதுறை மாவட்ட செயலாளராகவும் உள்ளார். இவரது மகன்தான் பாபு. பூம்புகார் தொகுதியை தவிர பெரிய அளவில் இவர் அறிமுகம் இல்லை என்றாலும் பூம்புகார் மற்றும் சீர்காழி தொகுதிகள் இவருக்கு சாதகமாக உள்ளன. இதற்கு சமீபத்தில் அதிமுகவில் இணைந்த மார்கோனியும் ஒரு காரணமாவார்.
காங்கிரசில் இந்த தொகுதியில் பிரவீன் சக்கரவர்த்தி போட்டியிட தயாராக இருந்தார். அதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வைத்திருந்தார். ஆனால் அவர் மக்களவை உறுப்பினராவது தமிழ்நாட்டில் இருந்த சிலருக்கு பிடிக்கவில்லை. இதனால் அவர்தான் உதயநிதி பற்றி முன்னால் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசிய குரல் பதிவை வெளியிட்டவர் என செய்திகள் வெளியாயின. இதனையொட்டி இவருக்கு சீட் தர மறுக்கப்பட்டு இந்த தொகுதியின் வேட்பாளராக ஆர்.சுதா அறிவிக்கப்பட்டார். இவருக்கு சொந்த ஊர் கும்மிடிபூண்டி. சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குரைஞராக பணியாற்றும் இவர், மெட்ராஸ் வழக்குரைஞர்கள் சங்கத்தின் துணைத்தலைவராகவும் உள்ளார். ராகுல் காந்தியுடன் பாரத் ஜோடோ யாத்திரையில் 150 நாட்கள் கலந்துகொண்டார்.
பாஜக கூட்டணியில் பாமகவை சேர்ந்த மக ஸ்டாலின் போட்டியிடுகிறார். ஒருபுறம் காவல் நிலையத்தில் குற்ற சரித்திர பதிவிட்டில் பெயர், மறுபுறம் ஆடுதுறை பேரூராட்சி தலைவர் என இவரது அடையாளம் சற்று வித்தியாசமானது. பாமகவின் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளராக உள்ள இவருக்கு திருவிடைமருதூர் மற்றும் கும்பகோணம் பகுதியில் உள்ள வன்னியர்கள் மத்தியில் ஆதரவு உள்ளது.
நாம் தமிழர் கட்சியின் நட்சத்திர வேட்பாளர் காளியம்மாள் இந்த தொகுதியில்தான் போட்டியிடுகிறார். இவர் நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராக உள்ளார். இந்த தொகுதியிலேயே உள்ள ஒரு மீனவ கிராமத்தை சேர்ந்த இவர் ஒரு சுற்றுசூழல் ஆர்வலராக உள்ளார். இந்த தொகுதிக்கு முதலில் அறிவிக்கப்பட்ட வேட்பாளரும் இவர்தான்
வெற்றி யாருக்கு
4 முக்கிய வேட்பாளர்கள் இருந்தாலும் போட்டி நிலவுவது என்னவோ காங்கிரசுக்கும் அதிமுகவிற்கும்தான். காங்கிரஸ் வேட்பாளர் இறுதி நிமிடங்களில் அறிவிக்கப்பட்டதானது அவரை இந்த பகுதிக்குள் கொண்டுபோய் சேர்ப்பதை கடினமாக்கியுள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சியில் சொல்லும் அளவிற்கு ஒருங்கிணைப்பு இல்லை. திமுகவின் தயவில்தான் அவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஆனாலும் சுதா சிறந்த பேச்சாளர் என்பதால் இவரை விளம்பரப்படுத்துவது எளிதான காரியமும் கூட. அதே நேரத்தில் மயிலாடுதுறை மற்றும் பாபநாசம் போன்ற பகுதிகள் இவருக்கு சாதமாக உள்ளன. மேலும் சிறுபான்மையினர் மற்றும் கூட்டணிக் கட்சியினரின் ஆதரவும் இவருக்கு இருக்கிறது.
அதிமுகவில் பாபுவை பூம்புகார், சீர்காழி தொகுதியை கடந்து மக்களுக்கு தெரியாது. இப்போதுதான் மக்களிடையே சென்றுகொண்டிருக்கிறார். ஆனாலும் அதிமுகவின் சின்னமும் அமைப்பு பலமும் இவருக்கு உதவியாக இருக்கின்றன. சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் நிற்பதால் இங்கிருக்கும் விசிகவினர் பலரும் சிதம்பரம் தொகுதியில் மையமிட்டு இருக்கின்றனர். இதனை பயன்படுத்தி அதிமுகவினர் பட்டியலினத்தவர்களின் வாக்குகளை குறிவைக்கின்றனர். இது இவர்களுக்கு சாதகமாகவும் அமையலாம்.
வேட்பாளர்களை அறிவிக்கும்வரையில் இந்த தொகுதி இந்தியா கூட்டணிக்கு சாதகமாகத்தான் இருந்தது காங்கிரஸ் வேட்பாளராக இந்த தொகுதிக்கு சுதா அறிவிக்கப்பட்டது ஏன் என்று எவருக்குமே தெரியவில்லை. இதைத்தான் அதிமுக தனக்கு சாதமாக பயன்படுத்திக்கொண்டு வேகமாக முன்னேறி வருகிறது.
ஆனால் பாபுவின் சொந்த சட்டமன்ற தொகுதியில் இருக்கும் வாக்குகளை கூட சிதறடிக்க களம் இறங்கி இருக்கிறார் காளியம்மாள். காளியம்மாளிற்கு மீனவ மக்களிடையே பெரிய ஆதரவு உள்ளது. இவரது தந்தை பவுன்ராஜ் கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வி அடைந்ததற்கு இவர் அங்கு போட்டியிட்டு வாக்குகளை பிரித்ததே காரணம். இந்த தேர்தலிலும் கூட இதே காரணிகள் வெளிப்படலாம்.
பொருத்திருந்து பார்ப்போம் யார் வெல்வார் என்று?