கெஜ்ரிவால் வழங்கிய 10 உத்திரவாதங்கள் என்னென்ன?

2024 ஆம் ஆண்டு தேர்தலை முன்னிட்டு ஒவ்வொரு கட்சிகளும் மக்களுக்கு வாக்குறுதிகளை வாரி வழங்கி வருகின்றன. இதில் பாஜகவினர் மோதியின் கேரண்டி என்ற பெயரில் உத்திரவாதங்களையும், காங்கிரஸ் கட்சியினர் கேரண்டி கார்டு என்ற பெயரில் உத்திரவாத அட்டையையும் வழங்கி வருகின்றனர்.

இதே பாணியில் தற்போது ஆம் ஆத்மி கட்சி கெஜ்ரிவாலின் கேரண்டி என்ற பெயரில் உத்திரவாதம் வழங்கியுள்ளது.

டெல்லி கலால் முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு கடந்த மார்ச் 21 ஆம் நாள் கைது செய்யப்பட்ட டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1 ஆம் நாள் வரை இடைக்கால பிணை வழங்கி உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது. இதனையொட்டி சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் நேற்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால் 10 உத்திரவாதங்களை வழங்கியுள்ளார். இந்த உத்திரவாதங்களை அவர் கெஜ்ரிவாலின் கேரண்டி என அழைத்தார்.

1.நாடு முழுவதும் 24 மணி நேரமும் மின்சாரம் வழங்க ஏற்பாடு.

2.அனைவருக்கும் நல்ல தரமான இலவச கல்வி.

3.அனைவருக்கும் தரம் உயர்த்தப்பட்ட இலவச மருத்துவ சிகிச்சை வழங்கப்படும். காப்பீடு போன்ற மோசடி திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்படாது.

4.எல்லைப் பகுதிகளில் சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் மீட்கப்படும். இராணுவத்திற்கு சுதந்திரம் அவர்களது வேலையை செய்ய முழு சுதந்திரம் வழங்கப்படும்

5.அக்னிவீர் திட்டத்தின் மூலம் சேர்க்கப்பட்ட அனைவருக்கும் நிரந்தர பணியிடங்கள் வழங்கப்படும்.

6.எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரையின்படி விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படும்.

7.டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும்.

8.ஓராண்டுக்குள் 2 கோடி பேருக்கு வேலை வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

9.ஊழலுக்கு எதிரான கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

10.சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) எளிதாக்கப்படும்.

இந்த உத்தரவாதங்கள் ‘கெஜ்ரிவாலின் உத்தரவாதங்கள்’ என வழங்கப்படும் என தெரிவித்த அவர், இதைப் பற்றி இந்தியா கூட்டணி தலைவர்களுடன் விவாதிக்கவில்லை எனவும் எனினும் அவர்களுக்கு இந்த வாக்குறுதிகளில் எந்த மாறுபட்ட கருத்தும் இருக்காது எனவும் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன