ஆக்கிரமிப்புகளை அகற்றும் அதிகாரம் வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு கிடையாது என மெட்ராஸ் உயர்நீதி மன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
உயர்நீதி மன்றத்தின் மதுரை கிளைக்கு உட்பட்ட மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி ஊராட்சித் தலைவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அனுப்பிய குறிப்பாணைகளை ரத்து செய்யக்கோரி, பலர் மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை புதன்கிழமை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கௌரி அமர்வு பிறப்பித்த உத்தரவில் , ”ஆக்கிரமிப்புகளை அகற்றும் அதிகாரம் வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு கிடையாது. ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி அவர்கள் குறிப்பாணையும் அனுப்பக்கூடாது. வருவாய் துறையினர்தான் சட்டப்படி குறிப்பாணை அனுப்பி ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தனர்.
மேலும், இது குறித்து உயர்நீதி மன்ற மதுரை அமர்விற்கு உட்பட்ட 14 மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பவும் உத்தரவிட்டுள்ளனர்.