மதுரை சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க சு.வெங்கடேசன் கோரிக்கை

மதுரை மாநகராட்சி பகுதிகளில் குண்டும், குழியுமான சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வழியுறுத்தி மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மதுரை மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமாரை வெள்ளியன்று நேரில் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார். பின்னர் அதிகாரிகளுடன் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சு.வெங்கடேசன் கூறுகையில்,

“மதுரையில் கடந்த 10 நாட்களாக பெய்த மழை காரணமாக மாநகராட்சி பகுதிகளில் சாலைகள் மிக மோசமான நிலையில் உள்ளது. சாலை சேதம் காரணமாக மக்களின் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் சாலைகளை உடனடியாக சீரமைப்பதற்கு, போர்க்கால அடிப்படையில் மாநகராட்சி நிர்வாகம் பணிகளை துவக்குவதற்கும் வடகிழக்கு பருவ மழை தீவிரத்தை கணக்கில் கொண்டு முன்னதாக மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் முழுமையாக தயாராக வேண்டும். மதுரை மாவட்டத்தில் ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 15 வரை 91 சதவீதம் மழை கூடுதலாக பெய்துள்ளது. ஆகஸ்ட் 15 வரை பெய்திருக்க வேண்டிய மழை 123 மில்லி மீட்டர். ஆனால், பெய்த மழை அளவு என்பது 236.6 மில்லி மீட்டர். அந்த அடிப்படையில் கடந்த 20 நாட்களில் 91% மழை என்பது அதிக அளவில் பெய்துள்ளது. இதனால் சாலைகள் மிகவும் மோசமாகியுள்ளது. எனவே தான் மக்கள் கடுமையான சிரமங்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த அடிப்படையில் தான் எங்களுடைய மாநகராட்சி துணை மேயர் தி. நாகராஜன், மாவட்ட செயலாளர் மா. கணேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜா. நரசிம்மன், அ, ரமேஷ் ஆகியோருடன் ஆணையாளரை சந்தித்துள்ளோம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் எந்தெந்த பணிகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற பட்டியலை கொடுத்துள்ளோம். அதற்குப் பின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் முழுமையாக இப்பணிகள் குறித்து விவாதித்திருக்கின்றோம். அதில் எடுக்கப்பட்ட முடிவுகளில் அடிப்படையில் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 34 சாலைகளை போர்கால அடிப்படையில் 10 நாட்களுக்குள் சீரமைக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். குறிப்பாக மதுரை ரயில் நிலையம் சாலை, புது ஜெயில் ரோடு, பந்தலக்குடி ரோடு என்று இவைகள் அனைத்திற்குமான பணிகள் ஆரம்பித்துள்ளது. இதுபோக மாநகராட்சி பகுதிகளில் 127 கிலோ மீட்டர் தொலைவிற்கு புதிய சாலைகள் அமைக்க மாநில அரசுக்கு மாநகராட்சி திட்ட அறிக்கை அனுப்பி வைத்துள்ளது. இதில் மூன்று வகையான பிரச்சனைகளை மதுரை மாநகராட்சி சந்தித்துக் கொண்டிருக்கிறது. ஒன்று மாநகராட்சி பகுதிகளுக்கான சாலைகள், இரண்டு தேசிய நெடுஞ்சாலைகளுடைய பாலங்கள், மூன்று தேசிய நெடுஞ்சாலைகள் சாலை விரிவாக்கப் பணி.

குறிப்பாக மேலமடை, கோரிப்பாளையம் மேம்பாலங்கள் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் உள்ள ஒப்பந்ததாரர்கள் விதிகளின்படி முறையான சர்வீஸ் ரோடு அமைத்துள்ளார்களா? என்ற கேள்வி எழுப்பபடுகின்றது. அடுத்த கட்டமாக மாவட்ட ஆட்சியரை சந்திக்க உள்ளேன். தேசிய நெடுஞ்சாலைத்துறை, மாவட்ட ஆட்சியரகம், மாநகராட்சி நிர்வாகம் மூன்றும் சேர்ந்த ஒரு கூட்டு கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் ஏற்பாடு செய்து ஆய்வு செய்ய வேண்டும். வளர்ச்சி பணிகள் நடைபெறும்போது இடையூறுகள் வரத்தான் செய்யும். ஆனால் அதில் அடிப்படையிலான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்ய வேண்டும். இது நிர்வாகத்தினுடைய பிரதான வேலைகள்.

 தினசரி கோரிப்பாளையம் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி நிலவுவதை ஊடகங்களில் நாம் பார்க்கின்றோம். மழை பெய்தால் தண்ணீர் தேங்கி இடுப்பு அளவிற்கு நிற்கின்றது அதற்கான மாற்று என்ன என்பதை உறுதிப்படுத்த வேண்டி உள்ளது. இது போன்ற பிரச்சனைகள் தேசிய நெடுஞ்சாலை துறை நிர்வாகம் மாநகராட்சிக்கு நிர்வாகம் ஆகியோர்களுக்கு நேரடியான தொடர்பு இருக்கின்றது. ஏனென்றால் நகரத்திற்குள் தேசிய நெடுஞ்சாலைனுடைய சாலைகள் உள்ளது; மாநகராட்சி அதில் பணி செய்து கொண்டிருக்கின்றது. எனவே இது போன்ற சிக்கல்கள் இருப்பதால் அதற்கான தீர்வும் காண வேண்டி உள்ளது. எனவே இது போன்ற பிரச்சனைகளை தீர்க்க மாவட்ட ஆட்சியரிடம் பேசி அதற்கான முடிவுகளை எடுக்க வேண்டும்.

அதேபோல் மதுரை பழங்காநத்தில் இருந்து திருநகர் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் திட்டமிட்ட நாட்களைக் கடந்து நடந்து கொண்டிருக்கின்றது. அதையும் முறை படுத்த வேண்டும். வடகிழக்கு பருவமழை துவங்கும் நாட்களில் இது போன்ற சிரமங்களை போக்கிட வேண்டும். தொடர்ச்சியாக இந்த காலகட்டங்களில் சாலை விபத்துகள் அதிகரித்துள்ளது, குறிப்பாக இரு சக்கர வாகன விபத்துகள் அதிகரித்துள்ளது இதற்கு பிரதான காரணமாக உள்ளது சாலைகள் இவைகளை எல்லாம் கணக்கில் கொண்டு அடுத்த 10 நாட்களில் இந்த 34 சாலைகளின் பணிகளை முடிக்க வேண்டும், இதர துறைகள் சார்ந்த சாலைகள் தேசிய நெடுஞ்சாலை சார்ந்த சாலைகள் குறித்த தகவல்களை மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு செல்வதும். மேலும் இரண்டு பிரதான சாலைகளில் உள்ள பணிகளை உறுதிப்படுத்துவதற்கும் மாவட்ட ஆட்சியரை சந்திக்க உள்ளோம். மழைக்காலத்தில் சாலை தொடர்பாக புகார் அளிக்க மாநகராட்சியில் 24 மணி நேரமும் இயங்ககூடிய தனி புகார் எண் வெளியிட வேண்டும் என்று கூறியுள்ளோம். ஒரு வாரத்திற்குள் அதை செய்வதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும் மதுரை மாநகராட்சி பகுதிகளில் சாலைகள் செப்பணிடுவது சம்பந்தமான ஆய்வுக் கூட்டத்தை வார வாரம் நடத்திட வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளோம். மதுரை மாநகராட்சியில் சேதமடைந்த சாலைகளை நகராட்சித் துறை அமைச்சர் மற்றும் நகராட்சி துறை தலைமைச் செயலர் ஆய்வு செய்திட வேண்டும் என்பதை இந்த கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார்.

நன்றி : தீக்கதிர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன