ஃபார்முலா ரேஸ் விவகாரம்… உண்மையில் அமீர் சொன்னது என்ன?

சென்னையில் நடக்க இருக்கும் ஃபார்முலா ரேஸ் கார் பந்தயத்தை பற்றி இயக்குநர் அமீர் பேசியது இப்போது சர்ச்சையாகி வருகிறது. இந்நிலையில் அமீர் எத்தகைய சூழலில் இதைப்பற்றி பேசினார் என்பதை அறித்துகொள்ள இந்த பதிவு உங்களுக்கு உதவலாம்.

சென்னையில் கெவி திரைப்படத்தின் அறிமுக விழா இன்று நடைபெற்றது. விழாவில் பேசிய நடிகரும் இயக்குநருமான அமீர், ”கெவி என்பது கதை நாயகனின் பெயர் அல்ல. அது ஒரு ஊரின் பெயர். அந்த ஊர் தேனிக்கும் பெரியகுளத்திற்கும் இடையில் உள்ள ஒரு ஊர். 10 கிலோமீட்டர் மேலே சென்றால் கொடைக்கானலுக்கு சென்று விடலாம். 10 கிலோ மீட்டர் கீழே வந்தால் பெரியகுளம் வந்துவிடலாம் அப்படியான மலைகிராமம் அந்த ஊர். இது போன்ற மலைகிராமத்தை பற்றிய அனுபவம் எனக்கும் உள்ளது. பெரிய குளத்திற்கு இன்னொரு புறம் அகமலை என்ற ஒரு ஊர் உள்ளது. இந்த ஊரில் குண்டஞ்செய் எஸ்டேட் என்ற ஒரு எஸ்டேட் உள்ளது. செங்குத்தான அந்த பாதையில் குதிரையில் நான் சென்று இருக்கிறேன். அங்கு நடக்க கூட பாதை இல்லை.

அது போன்ற ஒரு மலைகிராமத்தை பற்றிய படம்தான் இது. இப்படியான சாலை வசதி இல்லாத ஒரு கிராமத்தில் ஒரு பெண் கர்ப்பிணியாக இருக்கும்போது மருத்துவமனைக்கு போவது சிரமமானது. கெவி கிராமத்தில் இருந்து அரசு மருத்துவமனைக்கு வர பகலிலேயே 7 மணி நேரம் ஆகும். பகலிலே இப்படி எனில், இரவில் பிரசவ வலி ஏற்படுவது என்பது உயிரை பணயம் வைக்கும் வேலைதான். அப்படி ஒரு கர்ப்பிணிக்கு இரவு நேரத்தில் நடந்த சம்பவத்தை படமாக்கி இருப்பதாக சொல்கிறார்கள்.

இவர்கள் எந்த ஊரில் இந்த படத்தை எடுத்தார்களோ, அதே ஊரில் கடந்த வாரம் ஒரு பெண் உடல் நிலை பாதிக்கப்பட்டு டோலி கட்டி தூக்கிச் செல்லும்போது தாமதமாகி இறந்து விட்டார் . இதுதான் இன்றைய நிலைமை. இதில் நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இன்னும் சாலை வசதி இல்லாமல் எவ்வளவோ கிராமங்கள் உள்ளது. இன்னும் ஆற்றை கடந்து கயிற்று பாலத்தில்  தொங்கிக்கொண்டு பள்ளிக்கு செல்லக்கூடிய மாணவ மாணவிகள் உள்ளனர்.

சுதந்திரம் அடைந்து இவ்வளவு ஆண்டுகள் ஆகியும் இதுபோன்றவற்றில் இன்னும் மேன்மை அடையவில்லை என்பது வருத்தத்திற்கு உரிய ஒரு செய்திதான். அதை யாரும் மறுக்க முடியாது. இங்கு நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், ஃபார்முலா ரேஸ் கார் பந்தயம் நடத்தும் அளவிற்கு நம் நாடு முன்னேறி இருக்கிறது. அந்த அளவிற்கு முன்னேறி இருக்கக் கூடிய நாம் மருத்துவமனைக்கு செல்லக் கூடிய சாலை வசதிகளையும் முன்னேற்ற வேண்டியது அவசியமானது. கார் பந்தயங்களும் தேவைதான்; ஆனால் இந்த அடிப்படை தேவைகள் மிகவும் முக்கியம் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்” என தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன