சமூக வலைத்தளத்தில் நீங்கள் போடும், ஒரு லைக் என்ன செய்யும்… ஒரு எமோஜி என்ன செய்யும்… உங்கள் தலையெழுத்தையே மாற்றியமைக்கும் என்பதற்கு ஒரு சான்றாக அமைந்துள்ளது ஒரு சம்பவம்.
வங்க தேசத்தை சேர்ந்த மாணவி மனிஷா மகஜாபின். இந்தியாவில் அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள சில்லார் என்.ஐ.டி.யில் படித்து வருகிறார். இந்தியா- வங்க தேசம் இடையிலான கல்வி ஒப்பந்தத்தின் வாயிலாக சில்லார் என்.ஐ.டி.யில் 70 மாணவர்கள் தற்போது படித்து வருகின்றனர்.
அதில் மனிஷா மாகஜாபினும் ஒருவர். இவர் மின்னணு. தகவல் தொழில்நுட்ப பட்டம் படித்து வருகிறார். இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வந்த ஒரு பதிவிற்கு விருப்பம் தெரிவித்ததால் தனது சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
வங்க தேசத்தில் விடுதலை போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசுப் பணிகளில் 30% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதையடுத்து, அதற்கு எதிரான போராட்டங்கள் அந்த நாட்டையே உலுக்கி எடுத்தன. இதன் விளைவாக அந்த நாட்டு பிரதமாராக இருந்த ஷேக் ஹசீனா நாட்டை விட்டுத் தப்பி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து அந்நாட்டில் இந்தியாவிற்கு எதிரான கருத்துகள் மேலோங்கியுள்ளன. இந்த பதிவுகள் சமூக வலைத்தளங்களிலும் பதிவிடப்படுகின்றன.
இப்படியான ஒரு சமூக வலைத்தள பதிவிற்குத் தனது பக்கத்திலிருந்து விருப்பம் தெரிவித்துள்ளார் மனிஷா. இதைக்கண்ட சக மாணவ, மாணவியர்கள் அருகிலிருந்த காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து இந்த மாபெரும் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர், சமூக வலைத்தள பதிவிற்கு விருப்பம் தெரிவித்ததை உறுதி படுத்தினர். மேலும், கரீம் கன்ஞ் மாவட்டத்தில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை சாவடி வழியாக வங்க தேசத்திற்கே அனுப்பி வைத்தனர்.
ஒரு லைக்கிற்காக ஒரு மாணவி தான் படித்துக் கொண்டிருந்த கல்லூரியிலிருந்து தனது சொந்த ஊருக்கே அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.