நான்கு நாள் பயணமாக 16வது நிதி ஆணையம் தமிழ்நாட்டிற்குச் சுற்றுப்பயணம் வந்தது. இந்த குழு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கள ஆய்வுப் பணிகளையும் ஆலோசனைகளையும் நடத்தியது. இராமேஸ்வரம் கோயிலில் என்ன கள ஆய்வுப் பணி என்று கேட்காதீர்கள்.
நிதி ஆணையம் என்றால் என்ன?
இந்தியாவில் வரி வசூலிப்பு கட்டமைப்பு சிக்கலானது. வருமான வரி, தொழில் வரி, சுங்க வரி என பெரும்பாலான வரிகளை நேரடியாக மத்திய அரசே வசூலித்துக்கொள்கிறது. மாநில அரசுகள் விதிக்கும் வரிகள் மிகவும் சொற்பமானவையே. இதனால் மாநில அரசுகளின் நிதி ஆதாரங்களும் குறுக்கப்பட்டே உள்ளன. செலவுகளைப் பொறுத்தவரைப் பெரும்பாலானவை மாநில அரசுகளின் தலையிலேயே கட்டப்படுகின்றன. இதனால் வசூலிக்கப்படும் மொத்த வரி வருவாயை மத்திய மாநில அரசுகள் எப்படிப் பகிர்ந்து கொள்வது; அப்போது எழும் சிக்கல்களை எப்படித் தீர்ப்பது போன்ற காரணங்களுக்காக உருவாக்கப்பட்டதே நிதி ஆணையம். மேலும் எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்பதை முடிவு செய்வதும் நிதி ஆணையமே. அரசியல் அமைப்புச் சட்டத்தின் 280வது பிரிவின் படி குடியரசுத் தலைவர் நிதி ஆணையத்தை அமைத்து உத்தரவிடுகிறார்.
16வது நிதி ஆணையம்
இதுவரை 15 நிதி ஆணையங்கள் அமைக்கப்பட்டு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது 16வது நிதி ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.இந்த ஆணையம் அரவிந்த் பனகாரிய தலைமையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தின் உறுப்பினர்களாக அஜய் நாராயணன் ஜா, ஆனி ஜார்ஜ் மேத்யூ, மனோஜ் பாண்டா, சௌம்யா காந்தி கோஷ் ஆகியோர் உள்ளனர். இந்த குழு கடந்த 17ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நான்கு நாட்கள் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது.
முதல்வர் சந்திப்பு
தமிழ்நாட்டிற்கு வந்த குழுவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது கடந்த பதினைந்தாவது நிதி ஆணையத்தின் பரிந்துரையின் படி, 41 சதவீதம் மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கக் கூடிய நிதியை உயர்த்தியதற்குப் பாராட்டுகளைத் தெரிவித்தார். எனினும் பரிந்துரைக்கு மாற்றாகக் கடந்த 4 ஆண்டுகளாக 33.16 சதவீத நிதியே மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளார். மேலும் மத்திய அரசின் வரிவருவாயில் 50 சதவீதத்தை வரிப் பகிர்வாக மாநிலங்களுக்கு வழங்குவது மட்டுமே அனைவருக்கும் ஏற்புடையதாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.